எத்தியோப்பியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
அடிஸ் அபாபா:
எத்தியோப்பியா நாட்டுக்கு அரசுப் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி, அடிஸ் அபாபா விமான நிலையத்தில் நேரில் வந்து வரவேற்றார்.
ஜோர்டான் பயணத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர், பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்கு சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் அபி அகமது அலி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்றதுடன், காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அடிஸ் அபாபாவில் தரையிறங்கியதும் பிரதமர் அபி அகமது அலி அளித்த மரியாதையான வரவேற்பு தன்னை பெரிதும் கௌரவித்ததாக குறிப்பிட்டுள்ளார். எத்தியோப்பியா வளமான வரலாறும் கலாசார பாரம்பரியமும் கொண்ட நாடு என்றும், இந்தியா–எத்தியோப்பியா இடையிலான உறவுகள் நீண்ட காலமாக வலுவாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும், விமான நிலைய வரவேற்புக்குப் பிறகு, பிரதமர் அபி அகமது அலி, பிரதமர் மோடியை நகரில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு நடைபெற்ற பாரம்பரிய காபி விழாவில் அவர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விழா எத்தியோப்பியாவின் பண்பாட்டு மரபை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது, எத்தியோப்பியா பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதேபோல், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் அபி அகமது அலியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், இந்திய புலம்பெயர்ந்தோரையும் சந்தித்து உரையாற்ற உள்ளார். இந்த பயணத்தை முடித்த பின்னர், பிரதமர் மோடி ஓமன் நாட்டிற்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
