சென்னை: “நாங்கள் செய்த சாதனைகளை அடுத்து வரக்கூடிய ஆட்சியில் நாங்களே முறியடிப்போம். நாட்டின் வளர்ச்சியை விட தமிழகம் வளர்ச்சி அதிகம்” என முதல்வர் M. K. Stalin தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் 52 தொழில் நிறுவனத் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், அவரது முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரூ.74,267 கோடி மதிப்பில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், 52 தொழில்நிறுவனத் திட்டங்கள் தொடங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் என்பது மக்கள் நன்மைக்கான மாடல். இதை உலகிற்கு எடுத்துச்சொல்லும் மாநாடுதான் ‘தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு’. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் திகழ்கிறது என்பதை அனைத்து புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நாட்டின் சராசரியை விட 11.19 சதவீதம் அதிகமாக உள்ளது.
மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 41 சதவீதமாக உள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து விட்டோம் என்று மட்டும் நிற்காமல், அந்த நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வந்து, இளைஞர்களின் கைகளில் ஆஃபர் லெட்டர் கிடைக்கும் வரை தொடர்ந்து கண்காணித்து செயல்படுகிறோம். குறுகிய காலத்திலேயே தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வரும் விதம் குறித்து பலரும் கேட்கிறார்கள்.
ஒருங்கிணைந்த அணியுடனும், மனித வளம், நிலம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடனும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் அதிக முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள். தொழில்துறையில் நாங்கள் உருவாக்கிய சாதனைகளை அடுத்து நாங்களே முந்துவோம். இது உறுதி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
