தென்கொரியாவில், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபரின் மனைவி கிம் கியோன்-ஹீக்கு 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முன்னாள் அதிபரும் அவரது மனைவியும் ஒரே நேரத்தில் சிறையில் இருப்பது தென்கொரிய அரசியல் வரலாற்றில் முதல் முறையாகியுள்ளது.
முன்னதாக, முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோல், 2024 டிசம்பரில் நாட்டில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் அவர் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
மேலும், ராணுவச் சட்டத்தை பயன்படுத்தி பார்லிமென்டை முடக்க முயன்றதாக அவர் மீது தேசத்துரோக வழக்கும் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில், யூன் சுக்-இயோலுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அவரது மனைவி மீதான ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், தென்கொரிய அரசியலில் இந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
