ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாக கருதுகிறது காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
போர்டுவா:
வங்கதேச ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியாக கருதுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார். அசாம் மாநிலத்தின் போர்டுவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய அமித் ஷா, அண்டை நாட்டைச் சேர்ந்த அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் அசாமில் இருந்து மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் அடையாளம் கண்டு திருப்பி அனுப்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். பாஜ அரசு வங்கதேச ஊடுருவல்காரர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களை திருப்பி அனுப்பும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பிரதமர் மோடி அசாம் மக்களின் கலாச்சார அடையாளத்தை பாதுகாப்பதை உறுதி செய்துள்ளதாகவும், அதோடு மாநிலத்தின் அனைத்து துறை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அமித் ஷா தெரிவித்தார். நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அசாம் மக்களின் கலாச்சாரம், நிலம் மற்றும் அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் வங்கதேச ஊடுருவல்காரர்களை தனது வாக்கு வங்கியாகவே பார்த்ததாகவும், ஆனால் ஊடுருவல்காரர்களுக்கு எதிரான அசாம் இயக்கத்தின் தியாகிகளின் நினைவாக எதையும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு மற்றும் பாஜ அரசின் முயற்சிகளால், இந்த மாதம் பிரமாண்டமான நினைவிடம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக பாஜ ஆட்சி ஒரு பொற்காலமாக கருதப்படுவதாகவும், பிரதமராக கடந்த 11 ஆண்டுகளில் மோடி 86 முறை வடகிழக்கு பகுதிகளுக்கும், 36 முறை அசாமுக்கும் வருகை தந்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
ஊடுருவல்காரர்கள் இல்லாத அசாமை உறுதிப்படுத்த பாஜவுக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் வழங்க வேண்டும் என்றும், அசாமில் மட்டுமல்ல இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து வங்கதேச சட்டவிரோத குடியேறிகளையும் அடையாளம் காண்போம் என்றும் அவர் கூறினார்.
