கவஹாத்தி:
மாணவர் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக வங்கதேச ஊடகங்களில் வெளியான செய்திகளை, மேகாலயா போலீசாரும் எல்லை பாதுகாப்புப் படையினரும் (பிஎஸ்எப்) நிராகரித்துள்ளனர்.
வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அந்நாட்டில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், ‘இன்குலாப் மஞ்ச்’ என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவுக்குள் நுழைந்ததாக டாக்கா போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினரும் மேகாலயா போலீசாரும் மறுத்துள்ளனர்.
மேகாலயாவில் உள்ள ஹலுயாகாத் செக்டார் சர்வதேச எல்லை வழியாக எந்த நபரும் இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும், வங்கதேசத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றதும் தவறாக வழிநடத்துவதாகவும் பிஎஸ்எப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைப் பாதுகாப்பு படையினர் அத்தகைய நுழைவை கண்டறியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
