புதுடில்லி: ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதல் விவகாரத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பாதுகாப்பு சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) அமைப்பு, பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாடு குற்றஞ்சாட்டி வருகிறது.
சமீபத்தில் பாகிஸ்தானின் பன்னு மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய நங்கர்ஹார் மற்றும் பக்திகா மாகாணங்களில் டி.டி.பி. பதுங்குக்குழிகளை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இத்தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு குற்றஞ்சாட்டியது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறுகையில், ரம்ஜான் மாதத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தமைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. மேலும், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
