வாஷிங்டன்: உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் (GDP) டாப் 10 நாடுகளின் பங்குகள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்ட தொழிலதிபர் எலான் மஸ்க், உலக பொருளாதார பலம் அமெரிக்காவிடமிருந்து இந்தியா–சீனாவை நோக்கி மாறி வருவதாக தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ‘டெஸ்லா’ மற்றும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் அதிபரான அவர், ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தையும் சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-இன் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட இவர், அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவராக சில மாதங்கள் பணியாற்றினார். பின்னர், அமைச்சர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின், டிரம்ப் நிர்வாகத்தை அவ்வப்போது விமர்சித்து வரும் நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளின் பட்டியலை அவர் பகிர்ந்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் (IMF) தரவுகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில், 26.6 சதவீத ஜி.டி.பி. பங்குடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
17 சதவீத ஜி.டி.பி. பங்குடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 9.9 சதவீத ஜி.டி.பி. பங்குடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியா, துருக்கி, நைஜீரியா, பிரேசில், வியட்நாம், சவுதி அரேபியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இதுகுறித்து எலான் மஸ்க், உலக பொருளாதார பலம் அமெரிக்காவிலிருந்து இந்தியா மற்றும் சீனாவை நோக்கி மாறி வருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
