புதுடில்லி: சர்வதேச அளவில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையின்போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எல்பிஜி மற்றும் எல்என்ஜி போன்ற எரிசக்தி வளங்களுக்கு எந்தவித பற்றாக்குறையும் இல்லை என்று மத்திய அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும் பல நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சவுதி உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் ஆயில் டேங்கர் கப்பல்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் உயர்ந்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் எரிசக்தி விநியோகத்தில் எந்த சிக்கலும் ஏற்படாத வகையில் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவிடம் போதுமான அளவு எரிசக்தி இருப்பு உள்ளதாகவும், எல்பிஜி மற்றும் எல்என்ஜி போன்ற எரிவாயுக்களுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை இல்லை என்பதால், பல்வேறு விநியோகஸ்தர்களுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவுக்கு எரிவாயு வழங்க தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாற்று வழிகளில் எரிவாயு இறக்குமதி செய்வதற்கான திட்டங்களையும் அரசு ஆய்வு செய்து வருகிறது.
தற்போது இந்தியா தினமும் சுமார் 195 MMSCMD (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர்) அளவிற்கு எரிவாயு இறக்குமதி செய்து வருகிறது. அதில் சுமார் 60 MMSCMD அளவு மட்டும் கத்தார் நாட்டிலிருந்து கிடைக்கிறது. தேவையானால் மாற்று நாடுகள் மூலமாக கூடுதல் எரிவாயு இறக்குமதி செய்யும் வாய்ப்புகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது.
மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக முக்கிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனங்களுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சர்வதேச எரிசக்தி முகமை (IEA) மற்றும் ஒபெக் (OPEC) போன்ற அமைப்புகளுடனும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
அதோடு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு காப்பீடு தொடர்பாக அமெரிக்காவுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போதைய நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிசக்தி நிலைமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
