உலக சவால்களுக்கிடையிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: ஜனாதிபதி உரை
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், திரவுபதி முர்மு உரையாற்றினார். உலகளவில் பொருளாதார அழுத்தங்கள் நிலவி வரும் சூழலிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும், வேகமான வளர்ச்சிப் பாதையில் நாடு முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகளாவிய நெல் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு மட்டும் 350 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில் 4 கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கினார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களை முன்னேற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் இதுவரை 11 கோடிக்கும் அதிகமான இலவச சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 2.5 கோடி ஏழைப் பயனாளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்குவதில் அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும், ரூ.24,000 கோடிக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்கட்டமைப்பு வளர்ச்சியை எடுத்துரைத்த ஜனாதிபதி, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் வலையமைப்பைக் கொண்ட நாடாக மாறியுள்ளதாக கூறினார். 2025ஆம் ஆண்டில் மட்டும் 2 கோடிக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், கிராமங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசிய அவர், டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் முதலீடு அதிகரித்து வருவதாகவும், அசாமில் செமிகண்டக்டர் ஆலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அருணாச்சல் பிரதேசம், திரிபுரா மற்றும் மிசோரம் மாநில தலைநகரங்கள் அகல ரயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
பாதுகாப்புத் துறையில், 2025ஆம் ஆண்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகவும், ஏற்றுமதி ரூ.23 ஆயிரம் கோடியை கடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் மீதான உலக நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், இந்த நடவடிக்கையின் மூலம் இந்திய வீரர்களின் துணிச்சலும் வீரமும் உலகுக்கு வெளிப்பட்டதாகவும் கூறினார். எந்தவொரு பயங்கரவாதச் செயலுக்கும் இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின் படி இந்தியா கண் பாதிப்பு நோய் இல்லாத நாடாக உருவெடுத்துள்ளதாகவும், நாடு விரைவில் நக்சல் பிடியில் இருந்து முழுமையாக வெளிவரும் நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சி பல துறைகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 13 வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும். 2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
