புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை உலகளவில் மாற்றியமைக்கும் திருப்புமுனையாக அமைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
‘மன் கீ பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பாரத் மண்டபத்தில் நடந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னேற்றங்கள் உலக தலைவர்களை வியப்பில் ஆழ்த்தியதாக கூறினார். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள், புத்தாக்க வல்லுநர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதில் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார்.
மாநாட்டில் இரண்டு அம்சங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததாக பிரதமர் தெரிவித்தார். அதில், அமுல் அரங்கில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கால்நடைகள் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் விளக்கப்பட்டன. விவசாயிகளுக்கு இந்த தொழில்நுட்பம் வழங்கும் பயன்கள் எடுத்துரைக்கப்பட்டன.
மேலும், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பழங்கால ஓலைச்சுவடிகள் மற்றும் கையெழுத்து பிரதிகளை பாதுகாப்பது குறித்த முயற்சிகள் உலக பிரதிநிதிகளை கவர்ந்ததாக கூறினார்.
டிஜிட்டல் கைது மற்றும் டிஜிட்டல் மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார். வங்கி கே.ஒய்.சி. தொடர்பான தகவல் கோரிக்கைகள் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
வட அமெரிக்க நாடான கனடாவின் கிரிக்கெட் அணியில் இந்திய வம்சாவளி வீரர்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரியது என குறிப்பிட்டார். இந்தியர்கள் உலகின் பல பகுதிகளில் சாதனை புரிந்தாலும் தங்கள் வேர்களை மறப்பதில்லை என்றார்.
நாடு முழுவதும் பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும், மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
