உற்பத்தியில் தரமே முதன்மை: மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி
புதுடில்லி:
நாம் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களிலும் தரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய காலம் இது என, நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ உரையில் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட இருப்பதை நினைவூட்டினார். இந்திய அரசியலமைப்பு இந்த நாளில்தான் நடைமுறைக்கு வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், இன்று வாக்காளர் தினம் என்பதால், 18 வயது நிரம்பிய இளைஞர்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இது இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
கலாசாரம் உலகளவில்
இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலாக வளர்ந்துள்ளதாக கூறிய பிரதமர், இந்திய கலாசாரமும் பண்டிகைகளும் உலகம் முழுவதும் தங்களின் அடையாளத்தை பதித்து வருவதாகக் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர், தங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்து வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து வருவதாகவும் அவர் பாராட்டினார்.
மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் பணிகளை அவர் சிறப்பாக சுட்டிக்காட்டினார். மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் தமிழுடன் பிற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுவதோடு, தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட பிற இந்திய மொழிகளிலும் கல்வி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உறவுகளை வலுப்படுத்தும் அமைப்பு
இந்தியா–மலேசியா இடையிலான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் ‘மலேசியா இந்திய பாரம்பரிய சங்கம்’ முக்கிய பங்கு வகித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். அந்த அமைப்பு பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் கூறினார்.
தரமே தாரக மந்திரம்
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பதாக கூறிய பிரதமர், இப்போது தரத்திற்கு முழு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக வலியுறுத்தினார். இந்த ஆண்டில் நமது தாரக மந்திரம் ‘தரம், தரம், தரம்’ என்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்றார். நேற்று தயாரித்ததை விட இன்று சிறந்த தரமாக இருக்க வேண்டும் என்றும், இந்திய தயாரிப்புகள் என்றால் உயர்ந்த தரம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவாக வேண்டும் என்றும் கூறினார். தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் செயல்பட்டால்தான் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மறுசுழற்சி முயற்சிகள்
நாடு முழுவதும் பல நகரங்களில் குப்பைக் கிடங்கு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் குழுக்கள் செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். சென்னையில் இயங்கும் ஒரு குழு இந்த துறையில் சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும் அவர் பாராட்டினார். தனிப்பட்ட முயற்சிகளாகவோ அல்லது குழுக்களாகவோ தூய்மை பணிகளில் ஈடுபட்டால் தான் நகரங்கள் மேம்படும் என அவர் கூறினார்.
பெண்களின் பங்களிப்பு
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 800 பெண் விவசாயிகள் இணைந்து சிறு தானிய பொருட்களை தயாரித்து, நேரடியாக சந்தைக்கு விற்பனை செய்து வரும் குழுவின் பணிகளை பிரதமர் பாராட்டினார். அவர்களின் முயற்சி ஊக்கமளிப்பதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வறட்சியை வென்ற ஒற்றுமை
அனந்தபூர் பகுதியில் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், அங்குள்ள மக்கள் ஒன்றிணைந்து நீர்நிலைகளை தூரெடுத்தனர். இதன் விளைவாக தற்போது 10 நீர்நிலைகள் நீர் நிரம்பி காணப்படுவதோடு, 10 ஆயிரம் மரக்கன்றுகளும் நட்டுவளர்க்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுச்சூழல் மேம்பட்டு, ஒருகாலத்தில் வறண்ட நிலமாக இருந்த அந்த பகுதியில் இப்போது குழந்தைகள் நீர்நிலைகளில் நீந்தும் நிலை உருவாகியுள்ளது. இது மக்களின் ஒற்றுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் பாராட்டினார்.
கிராம பாரம்பரியம்
குஜராத் மாநிலத்தின் பேச்ராஜீல் அருகே உள்ள சந்தன் கிராமத்தின் தனித்துவமான பாரம்பரியத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். அந்த கிராமத்தில், குறிப்பாக முதியவர்கள் தங்கள் வீடுகளில் சமைப்பதில்லை; காரணம், அங்கு செயல்படும் சமுதாய சமையற் கூடம் என அவர் விளக்கினார்.
அடுத்த நிகழ்ச்சி அறிவிப்பு
அடுத்த மாதம் நடைபெறும் மன் கி பாத் நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து பேச இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். மேலும், நாட்டு மக்களின் இன்னும் சில சாதனைகளையும் அப்போது விவாதிப்போம் என்றார். இறுதியாக, குடியரசு தின வாழ்த்துகளை நாட்டு மக்களுக்கு அவர் தெரிவித்தார்.
