உதயநிதிக்காக போலிக் கூட்டணி; திமுக மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
புதுக்கோட்டை: உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக திமுக போலிக் கூட்டணி அமைத்துள்ளதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற பிரசார நிறைவு விழாவில் அவர் பேசியதாவது: இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் வேண்டிக் கொள்கின்றனர். இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்குப் பிறகு, அந்த இடத்தை நிரப்ப யாராவது வரமாட்டார்களா என மக்கள் எதிர்பார்த்த நிலையில், அமித் ஷா வந்துள்ளார். தேஜ கூட்டணி மூலம் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் ஏற்படும் என்றார்.
ஆட்சி மாற்றம்
வீட்டில் இருப்பதற்கும், வெளியே செல்லுவதற்கும் மக்கள் பயப்படுகின்றனர். இதற்கு போதைப்பொருள் மயம் முக்கிய காரணம். இந்த பயணம் ஒரு துவக்கம் மட்டுமே. திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இது இறுதி யாத்திரை அல்ல; இனிமேல்தான் தொடக்கம். இந்த ஆட்சி அகற்றப்படும் வரை மூன்று மாதங்கள் அல்ல, அயராது தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.
இந்த ஆட்சியில் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெண்களை அவதூறாக பேசும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கரூர் சம்பவத்துக்கு காரணமானவர்கள் நீதிமன்றம் ஏறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் காரணமாக கள்ளக்குறிச்சியில் 60 பேரும், விழுப்புரத்தில் 17 பேரும் உயிரிழந்ததாக குறிப்பிட்ட அவர், இதற்கும் திமுக ஆட்சியே காரணம் என்றார்.
போலி கூட்டணி – போலி மதசார்பின்மை
ஒரு குடும்பம் ஆட்சியில் தொடர வேண்டும் என்பதற்காகவும், உதயநிதி ஸ்டாலின்-ஐ துணை முதல்வராக்க வேண்டும் என்பதற்காகவும் திமுக போலியாக கூட்டணி அமைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். அமித் ஷா அமைத்துள்ள கூட்டணி ஆட்சி மாற்றத்துக்கான கூட்டணி; ஆட்சி மாற்றம் நிச்சயம் நடைபெறும் என்றார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றியதையடுத்து, மதுரையில் பூர்ணசந்திரன் தீக்குளித்த சம்பவத்துக்கு திமுகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின்-உமே காரணம் என்றும் அவர் கூறினார்.
பாஜ அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி என்றும், உண்மையான மதசார்பின்மையை கடைபிடிப்பது பாஜ மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார். திமுக போலி மதசார்பின்மையை பின்பற்றுவதாகவும், மக்கள் சக்தியுடன் திமுக ஒருபோதும் ஆட்சியை பிடித்ததில்லை என்றும் விமர்சித்தார்.
2021-ல் அனைவரும் ஒன்றாக இருந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது என்றும், திருவனந்தபுரத்தில் வீசிய அரசியல் காற்று தமிழகத்திலும் வீசும் என்றும் அவர் கூறினார். மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட மாற்றம் போல, தமிழகத்திலும் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
