உதட்டளவில் சமூகநீதி: அண்ணாமலை காட்டம்
சென்னை:
உதட்டளவில் சமூகநீதி குறித்து பேசி மக்களை ஏமாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, பட்டியல் சமூக மக்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திலும் முதல்வர் காட்ட வேண்டும் என்று, பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த மாணவர் விடுதிகளில், 100க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. முன்னதாக 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் இருந்த நிலையில், தற்போது 1,200 விடுதிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாகத் தெரிய வருகிறது.
சுமார் 98,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த விடுதிகளில், தற்போது 65,000 மாணவர்கள் மட்டுமே தங்கி கல்வி பயின்று வருகின்றனர். சுத்தமான அறைகள், சுகாதாரமான குடிநீர், தரமான உணவு போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் வழங்கப்படாததால், மாணவர்கள் இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் காட்டுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதால், அது வீணாகி கால்நடைகளுக்கான உணவாக விற்கப்படுவதாக ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம். பட்டியல் சமூக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விடுதிகள் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த நோக்கத்தை திமுக அரசு சிதைத்துவிட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பி வருகிறது திமுக அரசு. அந்த நிதியை இந்த மாணவர் விடுதிகளை மேம்படுத்த பயன்படுத்துவதில், திமுக அரசை எது தடுக்கிறது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
இதுபோன்ற சூழ்நிலையில், சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்ததற்காக இரண்டு நாட்கள் விளம்பர நாடகம் நடத்தி, முதல்வர் ஸ்டாலின் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
உதட்டளவில் சமூகநீதி பேசி மக்களை ஏமாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, பட்டியல் சமூக மக்கள் மற்றும் மாணவர்களின் உண்மையான முன்னேற்றத்திலும் முதல்வர் காட்ட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
