வாஷிங்டன்: ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்ட பின்னர், அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி, மீதமுள்ள ஆட்சியாளர்கள் உடனடியாக சரண் அடைந்து அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கமேனியின் மரணம் நாட்டில் பெரும் மாற்றத்திற்கான தருணமாக உள்ளதாக குறிப்பிட்டார். தற்போதைய ஆட்சி அமைப்பு முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இனி ரத்தப்பாசி நிறுத்தப்பட வேண்டுமெனவும் கூறினார்.
கமேனியின் வாரிசை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது வெற்றியடையாது என்றும், புதிய நியமனங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடையாது என்றும் எச்சரித்தார். இந்த ஆட்சியின் நடவடிக்கைகளில் பங்கேற்பவர்கள் சட்ட ரீதியான பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார்.
ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் அவர், மக்களுடன் இணைந்து நாட்டை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஈரானின் எதிர்காலம் மக்களின் துணிச்சலிலும் ஒற்றுமையிலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் வசிக்கும் ஈரானியர்களும் ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
