ரஷ்யாவுடன் தொடர்ந்து போர் நடந்து வரும் உக்ரைனுக்கு, ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர், நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில் தொடர்கிறது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கி வரும் சூழலில், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இதுவரை எந்த முடிவையும் தரவில்லை. உக்ரைன் நிலப்பரப்பை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், ரஷ்ய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், அதன் ராணுவத்தை மேலும் பலப்படுத்தவும் உதவ, ஐரோப்பிய ஒன்றியம் இந்த நிதி உதவியை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் கோடி மதிப்பிலான வட்டியில்லா கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அந்தோனியா கோஸ்டா கூறியதாவது:
2026–27 ஆண்டுகளுக்காக உக்ரைனுக்கு ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த தொகை ஐரோப்பிய ஒன்றியத்தால் மூலதன சந்தைகளில் கடன் வாங்கப்பட்டு, 27 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பின் ஏழு ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதேசமயம், ரஷ்ய சொத்துக்களை விற்று பணமாக்குவது தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.
