ஈ.வெ.ரா. ஆதரவாளர்களின் ஓட்டு வேண்டாம் என சீமான் அறிவிப்பு
சென்னை:
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குற்றவாளிகளுக்கு தண்டனை, தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்ற ஆதரவு உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் உரையாற்றிய சீமான், நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் அரசியல் கோட்பாட்டை முழுமையாக புரிந்து கொள்ள அரை நூற்றாண்டு காலம் தேவைப்படும் என்றார். எல்லாமே ஈ.வெ.ரா., என்ற கோட்பாட்டை மையமாக வைத்து சில அரசியல் சக்திகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த நாட்டை திருடர் கூடமாக மாற்றி, மக்களுக்குத் தலா 1,000 ரூபாய் பகிர்ந்தளித்து திராவிட திருட்டுக் கூட்டம் செயல்படுகிறது என்றும் விமர்சித்தார்.
இந்த நிலத்தில் உள்ள கட்சிகளை ஒழித்து, தூய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றும், தனித்து நின்றே நாங்கள் அங்கீகாரம் பெற்றோம் என்றும் சீமான் கூறினார். கடைசி நேரத்தில் சின்னம் ஒதுக்கப்பட்டாலும், மக்கள் நம் சின்னத்தை தேடி 8.22 சதவீதம் என 36 லட்சம் ஓட்டுகளை அளித்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இவ்வளவு தூரம் நம்மை உயர்த்தியவர்கள், இன்னும் மீதியிருப்பதையும் நமக்கு தருவார்கள்; 2026 தேர்தலில் நம்மை ஆதரிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இலவச திட்டங்களை கடுமையாக விமர்சித்த சீமான், ‘டிவி’, மடிக்கணினி, இலவச அரிசி, மோட்டார் பைக், கார் தருவோம் என அவர்கள் அறிவித்தால், ‘வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருவேன்’ என நான் சொல்வேன் என்றார். இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல; அது வீழ்ச்சி திட்டம், கவர்ச்சி திட்டம் என்றும், தேசத்தை நாசமாக்கியது இலவசம்தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் பஸ் கட்டணம் கிடையாது; சிறந்த கல்வி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து, எல்லாமே ஈ.வெ.ரா., என்பவர்கள் யாரும் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும், என் இனத்தின் முன்னோர் ஒவ்வொருவரும் எனக்கு பெரியார் என்பவர்களே ஓட்டு போட வேண்டும் என்றும் சீமான் தெரிவித்தார். எத்தனை பெரியார்கள் உள்ளனர் என்பதை ஜனவரி 3-ம் தேதி பட்டியலிடுவேன் என்றும், அன்று தற்போது அடையாளம் காட்டப்பட்டிருக்கும் பெரியாரை அடக்கம் செய்துவிட்டுத்தான் வெளியேறுவேன் என்றும் கூறினார்.
ஊழல், பசி, பட்டினி இல்லாத நாட்டை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்றும், நல்ல கல்வி, குடிக்க தண்ணீர், பயணிக்க நல்ல பாதை, நல்ல மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் சீமான் பேசினார். அரசு மருத்துவமனைகளில் தான் அனைவருக்கும் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதன் மூலம் நல்ல சமூகம் உருவாகும் என்றும், அதை நோக்கியே தனது பயணம் இருக்கும் என்றும் கூறினார்.
அதிகாரத்துக்கு வந்த பின் பாலியல் குற்றம் நடந்தால், குற்றவாளிகளை உடனுக்குடன் கொன்று விடுவேன் என்றும் அவர் கூறினார். நம் ஆட்சியில் ‘பார்த்து போ, பெண்களை எதுவும் செய்து விடாதே’ என பெற்றோர் ஆண் பிள்ளைகளை அறிவுறுத்துவார்கள் என்றும், பெண் பிள்ளைகளுக்கு துப்பாக்கி சுடுதல் முதல் அனைத்து தற்காப்புக் கலைகளும் கற்றுத் தருவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஹிந்துக்களை பா.ஜ.,வும், சிறுபான்மையினரை தி.மு.க.,வும் அணி திருட்டுகிறது என்றும், நாம் தமிழர்களை ஒருங்கிணைக்கிறோம் என்றும் கூறி, இவ்வாறு அவர் பேசினார்.
