புதுடில்லி: ஈரான் நாட்டின் ‘ஐரிஸ் லாவன்’ போர் கப்பலை கொச்சி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கியது மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ஈரானின் இரண்டு போர் கப்பல்கள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலன்’ கடற்படை பயிற்சியில் பங்கேற்றன.
அதில் ‘ஐரிஸ் டீனா’ என்ற போர் கப்பல் இலங்கையின் காலி துறைமுகம் வழியாக சென்ற போது அமெரிக்க கடற்படையால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 87 ஈரானிய வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு போர் கப்பலான ‘ஐரிஸ் லாவன்’ ஈரான் திரும்பும் வழியில் ஆபத்தை எதிர்கொண்டதால் இந்திய கடல் பகுதிக்குள் நுழைய அனுமதி கோரியது.
இதற்கு கடந்த 1ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டு, மார்ச் 4ஆம் தேதி அந்த கப்பல் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து டில்லியில் நடைபெற்ற ‘ரெய்சினா’ மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில் கூறியதாவது:
போர் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஈரான் போர் கப்பல்கள் பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக சிக்கலை சந்தித்தன.
அதில் இந்திய கடல் எல்லைக்கு அருகே பயணித்த கப்பல் ஒன்று நாட்டிற்குள் நுழைய அனுமதி கோரியது.
சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்தபோதிலும் இந்த விவகாரத்தை மனிதாபிமான கோணத்தில் இந்தியா பரிசீலித்தது.
அந்த அடிப்படையிலேயே ஈரான் போர் கப்பலை இந்தியா அனுமதிக்க முடிவு செய்தது. இந்த முடிவு சரியானதே என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
