ஈரான் போராட்ட வன்முறை: பலி எண்ணிக்கை 2,000-ஐ கடந்தது
டெஹ்ரான்: மேற்காசிய நாடான ஈரான்வில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த உயிரிழப்புகளுக்கு பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூடு காரணமில்லை என்றும், பயங்கரவாதிகள் மற்றும் கலவரக்காரர்கள் நடத்திய வன்முறையே காரணம் என்றும் அயதுல்லா அலி கமேனி தலைமையிலான அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு பிரச்னை, அரசியல் அடக்குமுறை, கருத்துச் சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக, கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த, இணைய சேவை முடக்கம், ஊடக கட்டுப்பாடு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, போராட்டங்கள் வன்முறையாக மாறி, பல நகரங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
படுகொலை
டிசம்பர் இறுதி வரை பலி எண்ணிக்கை 20 ஆக இருந்த நிலையில், பின்னர் படிப்படியாக உயர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் 50-ஐ கடந்தது. தற்போதைய நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை அமெரிக்க உளவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, எதிர்க் கட்சிகளின் ஆதரவு பெற்ற, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைமையிடமாக செயல்படும் ஈரான் இன்டர்நேஷனல் என்ற ஊடக நிறுவனம், 12,000 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அரசுக்கு எதிரான நாடு தழுவிய தொடர் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் 12,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது ஈரானின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொலைகள் கடந்த 8 மற்றும் 9ஆம் தேதிகளில், இஸ்லாமிய புரட்சிகர படை மற்றும் பாசிஜ் எனப்படும் துணை ராணுவப் படைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டவை என்றும், தனித்தனியாக நிகழ்ந்தவை அல்ல என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகசிய தகவல்
உச்ச தலைவர் அலி கமேனியின் நேரடி உத்தரவின் பேரில், அரசின் மூன்று பிரிவுகளின் தலைவர்களின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சுப்ரீம் நேஷனல் செக்யூரிட்டி கவுன்சில், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12,000 பேர் பலியானதாக கூறப்படும் இந்த எண்ணிக்கை, ஈரானின் பாதுகாப்புப் படையினரின் ரகசிய தகவல்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு ஆதாரங்களை சரிபார்த்து தொகுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அதிபர் அலுவலகத்துடன் நெருக்கமான நபர்கள், இஸ்லாமிய புரட்சிகர படையினர், நேரில் கண்ட சாட்சிகள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகளின் தரவுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் என கூறப்பட்டுள்ளது. இணையத் தடை, ஊடக முடக்கம், பத்திரிகையாளர்கள் மற்றும் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல், மொபைல் போன் கட்டுப்பாடுகள் ஆகியவை பலி எண்ணிக்கையை மறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் நிலவும் தகவல் பரிமாற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக, உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
போராடிய இளைஞருக்கு தூக்கு
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 26 வயதான எர்பான் சுல்தானி என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தண்டனை இன்று நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நார்வேயை தலைமையிடமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
உடல்களை வாங்க பெரிய கூட்டம்
ஈரானில் நான்கு நாட்களாக நீடித்த தகவல் தொடர்பு முடக்கத்தை நேற்று தளர்த்தியதைத் தொடர்ந்து, வெளிநாடுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்களை பெற மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வாரமாக வங்கி பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை என்றும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,கள் சூறையாடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
