அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை மையமாகக் கொண்ட பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரானை அச்சுறுத்தும் வகையில், மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்கா ராணுவத்தை அதிகளவில் குவித்துள்ளது. போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை தாங்கிய கப்பல்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழலில், அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டால் பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளையில், மத்திய கிழக்கில் போர் நிலை உருவாகாமல் இருக்க மறைமுக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நடந்த கலந்துரையாடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், குறுகிய காலக்கெடுவில் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.
இந்த நிலையில், ஈரான் மீது துல்லியமான தாக்குதல் நடத்தும் வாய்ப்புகளை பரிசீலித்த அமெரிக்கா, விமானப்படை தளங்களை பயன்படுத்த அனுமதி கோரி பிரிட்டனை அணுகியது. ஆனால், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் எனக் கூறி, இந்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது.
ஸ்விண்டன் அருகே உள்ள விமானப்படை தளத்தை அமெரிக்காவின் பயன்பாட்டுக்கு வழங்க முடியாது என பிரிட்டன் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மொரீஷியஸுடன் சாகோஸ் தீவுகள் தொடர்பாக ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், பிரிட்டனின் இந்த முடிவு சர்வதேச அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
