துபாய்: ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் துபாயில் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் அங்குள்ள சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டதால், நாளொன்றுக்கு சுமார் ரூ.2,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரம் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. அதன் காரணமாக சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
துபாய் சர்வதேச விமான நிலையம் நாளொன்றுக்கு சுமார் 2.6 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா வருவாய்கள் துபாயின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
2023 ஆம் ஆண்டு கணக்குகளின்படி துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விமானப் போக்குவரத்து துறையின் பங்களிப்பு 27 சதவீதம் ஆகும். இந்த துறையின் மூலம் சுமார் 6.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
தற்போது விமான நிலையம் முடங்கியுள்ளதால் பொருளாதார இழப்பு அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் எரிபொருள் விலைகளிலும் உயர்வு ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
