புதுடில்லி: ஈரான் நாட்டின் மதத்தலைவரும் ஆட்சியாளருமான கமேனி மரணத்திற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக இரங்கல் தெரிவித்துள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் இந்திய அரசின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை செயலர் கையெழுத்திட்டார்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் கடந்த சில நாட்களாக தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரான் நாட்டின் ஆட்சியாளராக இருந்த கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரும் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த தாக்குதலுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கமேனி மரணம் குறித்து இந்தியா ஆரம்பத்தில் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால் பின்னர், டெல்லியில் உள்ள ஈரான் தூதரக அலுவலகத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் இந்திய அரசின் சார்பில் கையெழுத்திட்டு, கமேனி மரணத்திற்கு இந்தியாவின் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தார்.
