டொனால்டு டிரம்ப், ஈரான் தனது அணு ஆயுத திட்டங்களை உடனடியாக கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டும் என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானை நோக்கி மிகப்பெரிய அமெரிக்க கடற்படை நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானை நோக்கி அனுப்பப்பட்டுள்ள போர்க்கப்பல் படை, முன்னதாக வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்ட படையை விட பலமடங்கு பெரியது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடற்படை, அவசர நிலை ஏற்பட்டால் மிக வேகமாகவும், துல்லியமாகவும் தனது பணியை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இனி ஏதேனும் தாக்குதல் நடைபெற்றால், அது முன்பு நடந்த எந்த நடவடிக்கையையும் விட கடுமையானதாக இருக்கும் என எச்சரித்த டிரம்ப், அணு ஆயுதங்களைத் தடுக்கும் வகையில் நியாயமான ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
