வாஷிங்டன்: ஈரான் அரசுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களில் 32,000 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து மக்கள் பல கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
மனித உரிமைகளை மீறும் வகையில் அப்பாவி மக்கள் தாக்கப்படுவதாக அமெரிக்கா ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறுகையில், “ஈரானிய மக்கள் கடுமையான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். நியாயமான காரணங்களுக்காக போராடும் மக்கள்மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு, குறுகிய காலத்தில் 32,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்,” என்றார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு ஊக செய்திகள் பரவி வருகின்றன.
