டெஹ்ரான்: கடந்த மாதம் ஈரான் நாட்டில் நடைபெற்ற நாடு தழுவிய போராட்டங்கள் மீதான அடக்குமுறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்காசிய நாடான ஈரானில் பொருளாதார நெருக்கடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதற்கு பதிலாக அரசு தரப்பு துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டதாக மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.
அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஏற்கனவே மேற்காசிய நாடுகளான ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அணுசக்தி பயன்பாடு தொடர்பாக நீண்டகாலமாக மோதல் நிலவுகிறது. அதேபோல் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் **அமெரிக்கா**வுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் நிலைமை மேலும் பதற்றமாக உள்ளது.
