ஈரானில் போராட்டம் தீவிரம்: அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தல்
டெஹ்ரான்: ஈரான் முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 646 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா அரசு, அமெரிக்கர்கள் உடனடியாக ஆர்மீனியா மற்றும் துருக்கி வழியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை ஈரான் அரசு வெளியிடவில்லை.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கர்கள் உடனடியாக ஆர்மீனியா மற்றும் துருக்கி வழியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் வன்முறை மற்றும் காயம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகள், சாலை மூடல்கள், பொது போக்குவரத்து இடையூறுகள் மற்றும் இணையத் தடைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அரசு மொபைல், லேண்ட்லைன் மற்றும் தேசிய இணைய நெட்வொர்க்குகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும், ஈரானுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதுடன், பல விமான சேவைகள் ஜனவரி 16ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கர்கள் உடனடியாக ஆர்மீனியா, துருக்கி வழியாக வெளியேற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
