ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடங்கிய போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாணயமான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அரசுக்கு எதிராக வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டங்கள், தற்போது 22 மாகாணங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பரவியுள்ளது.
பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களில் மேலும் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
