ஈரானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்
புதுடில்லி: ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மேற்காசிய நாடான ஈரான்-இல், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி முதல் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் வணிகர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறையாக மாறிய நிலையில், இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டால் அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தான் தங்கள் நாட்டில் போராட்டங்களை தூண்டி விடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு அறிவுரை
இதனிடையே, மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்திய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போது ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய நிறுவன ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் இணையதளத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், இதுவரை பதிவு செய்யாத இந்தியர்கள் உடனடியாக இந்தியத் தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
