மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவு மற்றும் ராணுவ ஒத்துழைப்பின் பின்னணியில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ம் தேதி இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் செல்ல உள்ளார்.
இந்த பயணத்தின் போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து, பிராந்திய மற்றும் இருதரப்பு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாட உள்ளார். மேலும், இஸ்ரேலில் வாழும் இந்திய சமூகத்தினரையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தை முன்னிட்டு இஸ்ரேலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரு நாடுகளுக்கு இடையே ராணுவம் சார்ந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் ராணுவ அமைச்சகத்தின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு இயக்குநரகம், இந்திய ராணுவ உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய ராணுவ அமைச்சகம் இணைந்து கருத்தரங்கு மற்றும் நேரடி சந்திப்புகளை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம், இஸ்ரேல் மற்றும் இந்திய ராணுவத்தில் உள்ள சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களை ஒன்றிணைத்து, இந்தியாவின் ராணுவ தொழில்துறை அமைப்பு மற்றும் ராணுவ கொள்முதல் நடைமுறைகள் குறித்து பரஸ்பரம் அறிந்துகொள்ள செய்வதே நோக்கமாக இருந்தது.
நிகழ்ச்சியில் 30 இந்திய மற்றும் 26 இஸ்ரேல் ராணுவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நெருக்கடியான காலங்களில் இரு நாடுகளின் ராணுவ தொழில்துறைகள் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. மேலும், துறை சார்ந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
