புதுடில்லி: இலவச மின்சாரம் தொடர்பான வழக்கில், தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இலவச திட்டங்களுக்கான நிதி எவ்வாறு திரட்டப்படுகிறது என்பதையும் விளக்குமாறு உத்தரவிட்டது.
மத்திய அரசு கடந்த 2024ல் கொண்டு வந்த மின்வாரிய திருத்த விதிகள் 23ன்படி, மின்வாரியத்தின் ஆண்டு வருவாய் தேவைக்கும், வசூலாகும் வருவாய்க்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதி காரணமாக, இலவச மின்சார திட்டத்தை செயல்படுத்த சிக்கல் உருவாகிறது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், இந்த விதி அரசியலமைப்புக்கு முரணானது என்றும், நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் வாதிடப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இலவச திட்டங்கள் குறித்து கவலை வெளியிட்டனர்.
நீதிபதிகள் கூறியதாவது: அரசு நலத்திட்டங்களுக்காக செலவிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஏழை மக்களின் நலனுக்காக செலவிடுவதில் தவறு இல்லை. ஆனால், செலுத்தும் திறன் உள்ளவர்களுக்கும் இலவச சேவைகள் வழங்குவது எந்த அளவிற்கு நியாயம் என்ற கேள்வி எழுகிறது.
மேலும், உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் முதலீடு செய்வது முன்னுரிமையாக இருக்க வேண்டும். திடீரென இலவச திட்டங்களை அறிவித்து பெரும் செலவினம் மேற்கொள்வது அரசின் நிதிநிலையை பாதிக்கக்கூடும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இலவச திட்டங்களை செயல்படுத்த விரும்பினால், அதற்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இதன் மூலம் செலவின கணக்கெடுப்பு சாத்தியமாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இறுதியாக, இலவச மின்சார திட்டத்திற்கான நிதி ஆதாரம் மற்றும் வாக்குறுதியின் பொருளாதார அடிப்படை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மத்திய அரசும் பதில் அளிக்குமாறு கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
