புதுடில்லி: மக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கு பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மாநிலங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என தமிழக மின் வாரியம் தொடர்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி மற்றும் அமர்வு நீதிபதிகள், நாடு முழுவதும் அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
விசாரணையின் போது, இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கட்டணம் செலுத்தும் திறன் உள்ளவர்களும் இலவசங்களை பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், “இலவசங்களுக்கு பதிலாக வேலைவாய்ப்பை உருவாக்க மாநிலங்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். வருவாய் பற்றாக்குறை நிலை உள்ள மாநிலங்களிலும் இத்தகைய கொள்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்” என நீதிமன்றம் தெரிவித்தது.
100 யூனிட் இலவச மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு நிதி எவ்வாறு கிடைக்கிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
