சென்னை: “இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமையும் கிடைக்கப் போராடுவோம்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார். அதன்படி, வீடுகள் வழங்குதல், அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த மூன்று கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு மொத்தம் 11.07 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற ஆதரவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், அதுவரை தமிழ்ச் சொந்தங்களுக்காக மாநிலத்தின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என வலியுறுத்தினார்.
