புதுடில்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இனிமேல் எம்.பி.க்கள் தங்களது இருக்கையில் அமர்ந்த பின்னரே வருகையை பதிவு செய்ய முடியும் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
வரும் 28ஆம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஓம் பிர்லா கூறியதாவது:
எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய ஒரே நேரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் கூடுவதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நேர விரயமும் ஏற்படுகிறது. இந்த சிக்கலை தவிர்க்க புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
புதிய முறையின்படி, எம்.பி.க்கள் தங்களது இருக்கையில் அமர்ந்த பின்னர், மேஜையில் உள்ள நவீன மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகையை பதிவு செய்யலாம். இதற்காக ஸ்மார்ட் அடையாள அட்டை, கைரேகை பதிவு அல்லது தனிப்பட்ட அடையாள எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்த முடியும்.
இந்த புதிய வருகைப் பதிவு முறை, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நடைமுறைக்கு வர உள்ளது. இதன் மூலம் நேர விரயம் குறையும். மேலும், வருகை பதிவு செய்த பிறகு எம்.பி.க்கள் சபையை விட்டு வெளியேறுவதும் கட்டுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
