புதுடில்லி: இயற்கை விவசாயத்தை வலுப்படுத்தி, வேளாண் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி தொடர்பாக நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:
பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் ஒவ்வொரு பைசாவும் சரியான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். நீண்டகால வளர்ச்சி பயணத்தில் விவசாயத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நமது பொருளாதாரத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக விவசாயம் திகழ்கிறது. அதனால், விவசாயத் துறையை அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. மேலும், வேதியியல் பொருட்கள் இல்லாத இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.
ரூ.4 லட்சம் கோடி
இயற்கை விவசாயத்தை வலுப்படுத்துவதோடு, வேளாண் ஏற்றுமதிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வேளாண் துறையை ஏற்றுமதி சார்ந்ததாக மாற்றுவதும் அவசியம். இந்தியாவில் காணப்படும் மாறுபட்ட காலநிலை சவால்களை விவசாயிகள் சமாளிக்க வேண்டியுள்ளது. தமிழக மற்றும் கேரள மாநில விவசாயிகள் நலனுக்காக தேங்காய்க்கு இந்த ஆண்டின் பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டு விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
கிராமப்புற வளர்ச்சி
பொருளாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பல்வேறு அரசு திட்டங்கள் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கி வருகின்றன. விவசாயப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதும் அவசியம். கிராமப்புற வளர்ச்சியில் எங்கள் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. மேலும், 2029ம் ஆண்டுக்குள் கூடுதலாக 3 கோடி பெண்களை மகளிர் சுயஉதவிக் குழுக்களில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் மாநிலங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
