இனி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம்: ஆஸி பிரதமர் திட்டவட்டம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற அனுமதிக்கமாட்டோம் என்றும், நாடு முழுவதும் துப்பாக்கிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும் என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
சிட்னி நகரின் பாண்டை கடற்கரையில் கடந்த 14ம் தேதி, யூதர்களின் ஹனுக்கா பண்டிகை நடைபெற்று கொண்டிருந்த போது பொதுமக்களை குறிவைத்து இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததுடன், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் சாஜித் அக்ரம் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் (24) என்பது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கையில் சாஜித் அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார். நவீத் அக்ரம் கைது செய்யப்பட்டு, கொலை உள்ளிட்ட 59 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, நவீத் அக்ரம் துப்பாக்கி கையாளுதல் தொடர்பாக முறையான பயிற்சி பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. சிட்னியை தளமாகக் கொண்ட துப்பாக்கி கிளப் ஒன்றின் தலைவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் அல்பானீஸ், நாட்டில் தேவையற்ற அளவில் துப்பாக்கிகள் இருப்பதாகவும், குடியுரிமை இல்லாதவர்களுக்கும் சிலருக்கும் அதிக எண்ணிக்கையில் துப்பாக்கி கிடைப்பது ஆபத்தானது என்றும் குறிப்பிட்டார். கடந்த தாக்குதலிலும் இப்படியான முறையில் ஆயுதங்கள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆஸ்திரேலிய மக்களின் பாதுகாப்பே அரசின் முதன்மை நோக்கம் என்றும், பயங்கரவாதத்தை முழுமையாக ஒடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த சம்பவத்தை விசாரித்து வரும் போலீசாருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
