இந்திய மண்ணில் முதல் ஒருநாள் தொடர் வெற்றி: நியூசிலாந்து சாதனை
இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்ததால், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 18) இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணிக்கு டெவன் கான்வே மற்றும் ஹென்றி நிகோலஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் ஸ்கோர் 5 ரன்னாக இருந்தபோது கான்வே (5) மற்றும் நிகோலஸ் (0) அவுட்டானார்கள். பின்னர் வந்த வில்ல் யங் 30 ரன் எடுத்து ஓரளவு தாக்குப்பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 219 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மிட்செல் இந்தியாவுக்கு எதிரான தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார். பிலிப்ஸ் 83 பந்துகளில் சதம் அடித்து 106 ரன்னும், மிட்செல் 137 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 28 ரன் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 337 ரன் குவித்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ரானா தலா 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
338 ரன் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ரோஹித் ஷர்மா (11), சுப்மன் கில் (23), ஸ்ரேயாஷ் ஐயர் (3), கே.எல். ராகுல் (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 71 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
நிதிஷ் குமார் 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி சதம் அடித்தார். இது அவரது சர்வதேச கிரிக்கெட்டில் 85வது சதமாகும். அவருடன் இணைந்து ஹர்ஷித் ரானா அதிரடியாக விளையாடி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து 52 ரன்னில் அவுட்டானார்.
பின்னர் வந்த சிராஜ் அடுத்த பந்திலேயே டக் அவுட்டானார். இதனால் அனைத்து அழுத்தங்களும் கோலியின் மீது விழுந்தது. 124 ரன் எடுத்திருந்த போது, கிறிஸ்டியன் கிளார்க் பந்தில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து கோலி ஆட்டமிழந்தார். தொடர்ந்து குல்தீப் யாதவ் ரன் அவுட்டானார். இதன் மூலம் இந்திய அணி 41 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்திய மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளது.
