வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களுக்கு அமெரிக்கா 126 சதவீதம் வரி விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணமாகக் கூறி, பல நாடுகளுக்கு அதிக வரி விதிக்கும் கொள்கையை பின்பற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியா தனது உற்பத்தி துறைக்கு நியாயமற்ற மானியம் வழங்கியதாக அமெரிக்க வர்த்தகத் துறை முன்வைத்த புகாரின் அடிப்படையில் இந்த உயர்வரி விதிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் சூரிய சக்தி இறக்குமதியில் இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ் ஆகிய நாடுகள் சேர்ந்து 57 சதவீத பங்களிப்பு வழங்கியுள்ளன. 2022ஆம் ஆண்டில் 83.86 மில்லியன் டாலர் மதிப்பில் இருந்த இந்திய சோலார் ஏற்றுமதி, 2024ஆம் ஆண்டில் 792.6 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்த சூழலில் விதிக்கப்பட்டுள்ள 126% வரி, இந்திய உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. வரி அறிவிப்புக்குப் பிறகு, வாரீ எனர்ஜிஸ் மற்றும் பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவன பங்குகள் சரிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
