இந்தியா மற்றும் பிரேசில் இடையிலான வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவும் டில்லியில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் இந்த முடிவை எடுத்தனர்.
இந்தியா வந்துள்ள அதிபர் லுலாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ மரியாதையுடன் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உயர்தொழில்நுட்பம் மற்றும் தூய்மையான எரிசக்திக்குத் தேவையான முக்கியத் தாதுக்கள் மற்றும் சுரங்கத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மேலும், பிரேசிலில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை வலுப்படுத்த சிறந்த மையம் அமைக்க இந்தியா உதவ முன்வந்துள்ளது. எத்தனால் உள்ளிட்ட உயிரி எரிபொருள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
மலிவு விலையில் மருந்துகள் வழங்குதல், பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய அம்சங்களிலும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக பிரேசில் தொடர்கிறது.
இந்த கூட்டணி இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வின்–வின் உறவாகும் என்றும், தெற்கு நாடுகளின் குரலாக உலக அரங்கில் ஒலிக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
