புதுடில்லி: இந்தியா மற்றும் பிரேசில் இடையிலான உறவை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பாராட்டி பேசினார். இந்தியா வந்துள்ள அவர், டில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் பங்கேற்றார். தொடர்ந்து, ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், டில்லியில் நிருபர்களிடம் லுலா டா சில்வா கூறியதாவது: நான் முதன்முறையாக 2005ம் ஆண்டு இந்தியா வந்தபோது, பிரேசில் – இந்தியா இடையிலான வர்த்தகம் 2.4 பில்லியன் டாலர்கள் மட்டுமே இருந்தது. தற்போது அது 10.5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 20 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகள் வலுவாக உள்ளன. விரைவில் 30 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, சுகாதாரத் துறையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பது மிகவும் முக்கியமானது.
இந்தியா – பிரேசில் உறவை நான் பாராட்டுகிறேன். இரு நாடுகளும் ஜனநாயக சகோதரர்கள். இந்தியா போன்ற ஒரு நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிக முக்கியமானது. பழகிய பணக்கார நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஒருவித சர்வாதிகாரம் இடம்பெறும். ஆனால், இந்தியா – பிரேசில் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. பிரேசிலில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு லுலா டா சில்வா தெரிவித்தார்.
