இந்தியா – நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதை உறுதி செய்யும் வகையில், இரு நாட்டு பிரதமர்களும் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, அடுத்த மூன்று மாதங்களில் ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையேயான சரக்கு வர்த்தகத்தையும் முதலீட்டையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, இந்தியாவின் 100 சதவீத ஏற்றுமதிகளுக்கும் நியூசிலாந்து சுங்க வரி விலக்கு வழங்க முன்வந்துள்ளது. இதனுடன், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.1.80 லட்சம் கோடி அளவுக்கு அன்னிய நேரடி முதலீடு செய்யவும் நியூசிலாந்து உறுதி அளித்துள்ளது. இதேபோல், நியூசிலாந்தின் 95 சதவீத ஏற்றுமதிகளுக்கு இந்தியா சுங்க வரி விலக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்தில் விதிக்கப்படும் சராசரி சுங்க வரி 2.30 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், நியூசிலாந்து பொருட்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் சராசரி சுங்க வரி 17.80 சதவீதமாக உள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுகளின் பயணம் 2025 மார்ச் 16ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியா வந்திருந்தபோது, பேச்சுகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது. அதன் பின்னர், மே 5 முதல் 9 வரை முதல் சுற்றுப் பேச்சுகள் டில்லியில் நடைபெற்றன. ஜூலை 14 முதல் 25 வரை இரண்டாம் சுற்றுப் பேச்சுகள் மீண்டும் டில்லியில் நடந்தன. செப்டம்பர் 15 முதல் 19 வரை மூன்றாம் சுற்றுப் பேச்சுகள் நியூசிலாந்தின் குயின்ஸ் டவுன் நகரில் நடைபெற்றன. அக்டோபர் 13 முதல் 17 வரை டில்லியில் இடைக்காலச் சுற்றுப் பேச்சுகள் நடத்தப்பட்டன. நவம்பர் 3 முதல் 7 வரை நான்காம் சுற்றுப் பேச்சுகள் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்றன.
டிசம்பர் 22ஆம் தேதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிறிஸ்டோபர் லக்ஸன் தொலைபேசி வாயிலாக உரையாடி, வர்த்தக ஒப்பந்த பேச்சுகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அறிவித்தனர். இந்த ஒப்பந்தம் 2026 மார்ச் மாதத்துக்கு முன் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளின் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்த பின்னர், ஜூன் மாதத்திற்கு பின் ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரும்.
இருதரப்பு வர்த்தக மதிப்பைப் பொருத்தவரை, 2024–25ஆம் ஆண்டில் மொத்த வர்த்தகம் ரூ.21,600 கோடியாக இருந்தது. இது 2029–30ஆம் ஆண்டில் ரூ.45,000 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024–25ஆம் ஆண்டில் இருதரப்பு சரக்கு வர்த்தகம் ரூ.11,700 கோடியாக பதிவாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், 5,000 தொழில் நிபுணர்களுக்கு தற்காலிக விசா வழங்கவும், 1,000 பணியாளர்களுக்கு விடுமுறை கால விசா வழங்கவும் நியூசிலாந்து முடிவு செய்துள்ளது. ஆயுஷ் மற்றும் யோகா பயிற்றுனர்கள், சமையல் நிபுணர்கள் மற்றும் இசை ஆசிரியர்களுக்கு இந்த தொழில் நிபுணர் விசா பொருந்தும். தகவல் தொழில்நுட்பம், கல்வி, நிதி சேவைகள் மற்றும் சுற்றுலா துறைகளில் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்படும்.
அதே நேரத்தில், நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், காய்கறிகள், சர்க்கரை, செம்பு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு வழங்கப்படவில்லை.
வெறும் ஒன்பது மாதங்களில் இந்த வர்த்தக ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ளது. ஒரு வளர்ந்த நாட்டுடன், இவ்வளவு குறுகிய காலத்தில் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
