இந்தியா–ஜெர்மனி பேச்சுவார்த்தை: பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டறிக்கை
ஆமதாபாத்: காஷ்மீரின் பஹல்காம் மற்றும் டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியா–ஜெர்மனி நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஆமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டு, சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவிலும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, காந்தி நகரில் உள்ள மஹாத்மா மந்திரில் பிரதமர் மோடியும், ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸும் சந்தித்து, இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், இரு நாடுகளுக்கிடையே கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த கூட்டறிக்கையில், ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழிப்பதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், சர்வதேச சட்டங்களின்படி பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் டில்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்தோ-பசிபிக் பிராந்தியம் தடையற்றதும் சுதந்திரமானதும் ஆக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம், உக்ரைன் விவகாரம், காசா அமைதி திட்டம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆமதாபாத்தில் ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸை வரவேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அவரது இந்திய வருகை, இந்தியா–ஜெர்மனி உறவுகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆசியாவில் தனது முதல் பயணத்திற்கான இடமாக இந்தியாவை தேர்வு செய்தது வலுவான இருநாட்டு உறவுகளுக்கான அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.
மேலும், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் வளர்ந்து வரும் முக்கிய தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்புடன் உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒப்புக்கொண்டதாகவும், காலநிலை நடவடிக்கை, நம்பகமான மற்றும் மீள்தன்மை கொண்ட விநியோக சங்கிலி, திறன் மேம்பாடு மற்றும் கல்வி குறித்து விவாதித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
