இந்தியா–ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்: உலக சக்திகள் ஒன்றிணைவதாக ஜெர்மனி பிரதமர்
டாவோஸ்:
இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தாகியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், உலகளாவிய அளவில் பெரிய சக்திகள் ஒன்றிணைவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாக, ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
டாவோஸ் மேடையில் ஜெர்மனி பிரதமர் பேச்சு
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய பிரெட்ரிக் மெர்ஸ், இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே ஏற்பட்டுள்ள இந்த வர்த்தக ஒப்பந்தத்தை முக்கிய திருப்புமுனையாக குறிப்பிட்டார்.
“ஐரோப்பாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்காக என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். சக்தி வாய்ந்த நாடுகள் சர்வதேச விதிகளை மதித்து, அனைவருக்கும் பாதுகாப்பும் பயனும் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும்,” என்றார்.
ஒன்றிணையும் சக்திகள் – உலகிற்கு பலன்
சக்திவாய்ந்த நாடுகள் ஒன்றிணையும் போது, அதன் பயன் அந்த நாடுகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் கிடைக்கும் என மெர்ஸ் தெரிவித்தார்.
அந்த வகையில், இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், உலக பொருளாதாரத்தில் புதிய சமநிலையை உருவாக்கும் சக்தியாக இருக்கும் என்றும் கூறினார்.
இந்திய பயணம் – ஒப்பந்த உறுதி
இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டென் லேயன் விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது, இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும்.
புதிய வர்த்தக கூட்டாண்மைகள்
தன்னிச்சையான விதிகளை விட, முறையான ஒழுங்குமுறைகளை விரும்பும் நாடுகளுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு உந்து சக்தியாக அமையும் என்றும்,
ஐரோப்பிய யூனியன் மெக்சிகோ மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களையும் இறுதிக்கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்தார்.
