லக்னோ: இந்தியா விரைவில் உலகிற்கு வழிகாட்டும் திறன் பெற்ற நாடாக உருவெடுக்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
அவர் கூறுகையில், உலகளாவிய பிரச்னைகளுக்கான தீர்வுகள் இந்தியாவின் சிந்தனை மற்றும் பாரம்பரியத்தில் உள்ளன. இந்தியா உலகத் தலைவராக மாற வேண்டுமெனில், அனைத்துத் துறைகளிலும் சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும் என்றார்.
மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறையை விமர்சித்த அவர், சக்திவாய்ந்த நிலையை அடைவதற்காக தடையாக இருப்பவர்களை அகற்றும் மனப்பான்மை உலக அரசியலில் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். இதனை அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டார்.
குடும்ப அமைப்பு குறித்து பேசுகையில், ஒவ்வொரு ஹிந்து தம்பதியினரும் குறைந்தது மூன்று குழந்தைகளைப் பெற வேண்டும் என கருத்து தெரிவித்தார். மேலும், ஊடுருவல்காரர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
அனைவரும் ஒரே நாட்டின் மக்கள் என்ற உணர்வை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என அவர் கூறினார். சமுதாயத்தில் காலப்போக்கில் உருவான பாகுபாடுகளை ஒழித்து நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் மோகன் பாகவத் தெரிவித்தார்.
