இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக முன்னேறும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு
புதுடில்லி:
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், விவசாயம் மற்றும் விண்வெளி துறைகளிலிருந்து விளையாட்டு மற்றும் ஆயுதப்படைகள் வரை, இந்தியப் பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றி வருவதாக கூறினார்.
உலகளவில் தற்போது நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உறுதியான பாதையில் பயணித்து வருவதாகவும், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயர்வடையும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசின் நடவடிக்கைகளால் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
உலகின் மிகப்பெரிய குடியரசாக விளங்கும் இந்தியாவின் அடிப்படை ஆவணம் அரசியலமைப்பே என்றும், அதில் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மதிப்புகள் அடங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து சிந்திக்க குடியரசு தினம் ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது என்றும், அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்கள் தேசிய ஒற்றுமைக்கும் தேசியவாத உணர்வுக்கும் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும், அதனைத் தொடர்ந்து பார்வையற்றோர் பெண்கள் டி20 உலகக் கோப்பையையும் இந்திய மகளிர் அணிகள் வென்றதன் மூலம் விளையாட்டு வரலாற்றில் பொன்னான அத்தியாயம் எழுதப்பட்டதாகவும் அவர் பாராட்டினார்.
மேலும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப் படையினர் அழித்ததாகவும், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் நாட்டின் தன்னம்பிக்கை தெளிவாக வெளிப்பட்டதாகவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
