டெல் அவிவ்: இந்தியா–இஸ்ரேல் உறவு ரத்தமும் தியாகமும் இணைந்து உருவான ஒன்று என, இஸ்ரேல் பார்லிமென்டான ‘நெசெட்’ அவையில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடியை, டெல் அவிவ் விமான நிலையத்தில் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார். இந்த பயணத்தின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெசெட் அவையில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் 140 கோடி மக்களின் வாழ்த்துகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளதாக கூறினார். 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதலை கண்டித்து, அந்த வேதனையில் இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது என்றார். பயங்கரவாதத்தை எந்த சூழலிலும் நியாயப்படுத்த முடியாது என்றும், உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
காசா அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகவும், பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். மும்பை தாக்குதலை நினைவுகூர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை பின்பற்றுகிறது என்றார்.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், புதுமை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
முதல் உலகப் போரில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்த பிராந்தியத்தில் உயிர்நீத்ததை நினைவுகூர்ந்து, இந்த நிலத்துடனான இந்தியாவின் உறவு தியாகத்தின் மூலம் எழுதப்பட்டது என்றார்.
