ஜெருசலேம்: பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தின் போது, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். நேற்று அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்தார். இன்று அதிபர் இசாக் ஹோர்சோக்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், நெதன்யாகு முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
புதுமை, விவசாயம், கடல்சார் பாரம்பரியம், புவி இயற்பியல் ஆய்வு, மீன்வளர்ப்பு, செயற்கை நுண்ணறிவு, கல்வி, வணிகம் மற்றும் விண்வெளி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் இதில் இடம்பெற்றன.
இதற்குப் பிறகு இரு நாட்டு தலைவர்களும் ஊடகங்களை சந்தித்தனர். அப்போது நெதன்யாகு கூறுகையில், மோடியின் இந்த பயணம் சிறப்பான முடிவுகளை உருவாக்கியுள்ளது என்றார். குறுகிய காலத்தில் இருந்தாலும் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இஸ்ரேல் பார்லிமென்டில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, மக்களின் கண்கள் நெகிழ்ந்ததை காண முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
கல்வி துறையில் ஒவ்வொரு மாணவரும் முழுத் திறனை அடைய உதவும் மென்பொருள் மற்றும் ஏஐ வசதிகள் இருப்பதாகவும் கூறினார். கடந்த கால வரம்புகள் இனி தடையாக இருக்காது என்றும், எதிர்காலம் புதுமை செய்பவர்களுக்கே சொந்தமானது என்றும் தெரிவித்தார். இந்தியாவும் இஸ்ரேலும் புதுமையில் கவனம் செலுத்தும் நாடுகள் எனவும், இரண்டும் பெருமைமிக்க பண்டைய நாகரிகங்கள் என்றும் குறிப்பிட்டார். விரைவில் ஜி2ஜி கூட்டத்தை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி கூறுகையில், அளித்த வரவேற்புக்காக நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக இஸ்ரேல் வந்ததை நினைவுகூர்ந்து, மீண்டும் வருவது பெருமையாக இருப்பதாக கூறினார்.
பார்லிமென்டின் உயரிய விருது வழங்கப்பட்டதை 140 கோடி இந்தியர்களுக்கும், இந்தியா–இஸ்ரேல் நட்புக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு விரைவில் முழு வடிவம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கூட்டாண்மை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இஸ்ரேலில் யுபிஐ பயன்பாட்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். சிவில் அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவோம் என்றும், திறமைகள் மிக்க கிராமங்களை உருவாக்க இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.
உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன என்றும் கூறினார். உலகளாவிய குழப்ப சூழலில் மனிதநேயம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது என்றும், காசா அமைதி திட்டம் அமைதிக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார். இத்தகைய முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என கூறினார்.
