இந்தியாவை குற்றம் சாட்டுவது ஆதாரமற்றது: ஹாதி கொலை விவகாரத்தில் ஷேக் ஹசீனா விளக்கம்
புதுடில்லி:
வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொலை சம்பவத்துக்கும் இந்தியாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெளிவுபடுத்தியுள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற அரசியல் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த ஓஸ்மான் ஹாதி, கடந்த டிசம்பர் 18ம் தேதி டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் வன்முறை அதிகரித்தது.
இந்த கொலை அவாமி லீக் கட்சியின் உத்தரவின் பேரில் அரசியல் பழிவாங்கலாக நடைபெற்றதாக வங்கதேச போலீசார் தெரிவித்தனர். மேலும், முக்கிய குற்றவாளி பைசல் கரீம் மசூத் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகவும், மேகாலயாவில் பதுங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதை மறுத்த மசூத், தான் துபாயில் இருப்பதாகவும், கொலையுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஷேக் ஹசீனா கூறியதாவது:
இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சியில் நிலவிய சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வன்முறைகளே ஹாதி கொலைக்கு காரணம். இந்த சம்பவம் மிகுந்த துயரமானது.
இடைக்கால அரசின் நிர்வாகத் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, ஹாதி கொலையை பயன்படுத்தி இந்தியாவை தொடர்புபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவை குற்றம் சாட்டுவது முழுமையாக ஆதாரமற்றது.
வங்கதேசத்தின் வர்த்தக மற்றும் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தவும், பிராந்திய நிலைத்தன்மையை உறுதி செய்யவும் இந்தியா தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறது. ஆனால் யூனுஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை ஆபத்தான பாதையில் செல்கிறது. இவ்வாறு ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
