டாவோஸ்:
இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) விரைவில் கையெழுத்தாகும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் தெரிவித்தார்.
டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இன்னும் சில தொழில்நுட்ப பணிகள் மட்டும் மீதமுள்ளதாகவும், ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறினார். இந்த ஒப்பந்தத்தை “அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய்” என பலர் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் மூலம், சுமார் 200 கோடி மக்கள் அடங்கிய மிகப் பெரிய சந்தை உருவாகும் என்றும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்கை இது கொண்டிருக்கும் என்றும் உர்சுலா வோன் டெர் லேயன் கூறினார்.
டாவோஸ் மாநாடு முடிந்ததும் இந்தியா செல்ல உள்ளதாகவும், இந்த பயணம் இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையிலான பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்தும் நோக்கில் இருக்கும் என்றும் அவர் விளக்கினார். இரு தரப்புக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த பல பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதிப்பது தவறான முடிவு என்றும், நீண்ட கால நட்பு நாடுகள் மீது வரி விதிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் உர்சுலா வோன் டெர் லேயன் விமர்சித்தார்.
