இந்தியாவுக்கு விதித்த 50% வரியை 25% ஆக குறைக்க அமெரிக்கா பரிசீலனை
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத இறக்குமதி வரியை 25 சதவீதமாக குறைப்பதை பரிசீலிக்கலாம் என அமெரிக்க நிதியமைச்சரும் கருவூல செயலாளருமான ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், வர்த்தக இடைவெளியை குறைக்கும் நோக்கில் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்தார். அதன் கீழ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது வரி விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டன. இதே காலகட்டத்தில், ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையிலான போரை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட சர்வதேச முயற்சிகள் பலனளிக்கவில்லை.
ரஷ்யா, தன் கச்சா எண்ணெயை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கி, போர் செலவுக்கான நிதியை திரட்டி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ரஷ்யாவின் வருவாய் ஆதாரத்தை கட்டுப்படுத்தினால் போரை நிறுத்த முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்த டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் தவிர்க்க வேண்டும் என வெளிப்படையாக எச்சரித்தார்.
உலகளவில் ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவிற்கு, பரஸ்பர வரி விதிப்புடன் கூடுதலாக அபராத வரியும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, அமெரிக்காவுக்குச் செல்லும் இந்திய பொருட்களுக்கு வழக்கமாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன், கூடுதலாக மேலும் 25 சதவீதம் சேர்த்து மொத்தம் 50 சதவீத வரி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள இந்த 50 சதவீத வரியை 25 சதவீதமாக குறைப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார். ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவின் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை கணிசமாகக் குறைத்துள்ளதாகவும், அந்த கொள்முதல் அளவு கடுமையாக சரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை ஒரு வெற்றியாகக் கருதலாம் என்றும், இந்த மாற்றம் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை தளர்த்துவதற்கான சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் மீதான வரிகள் இன்னும் அமலில் உள்ளன என்றும், அவற்றை நீக்குவதற்கான ஒரு வழி இருக்கலாம் என்றும் தெரிவித்த ஸ்காட் பெசென்ட், இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை 25 சதவீதமாக குறைப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என மீண்டும் உறுதிப்படுத்தினார்.
