வாஷிங்டன்: தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதல் ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்க பார்லியில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், “இது அமெரிக்காவின் பொற்காலம்” எனக் கூறி தனது நிர்வாக சாதனைகளை விளக்கினார்.
கடந்த ஓராண்டில் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பொருளாதாரம் வலுவடைந்துள்ளது, எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன, ராணுவமும் காவல் துறையும் பலம் பெற்றுள்ளன என கூறினார். உலக அரங்கில் அமெரிக்காவுக்கு மீண்டும் மரியாதை கிடைத்துள்ளதாகவும் வலியுறுத்தினார்.
தாம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோது நாடு பல சவால்களை சந்தித்ததாகவும், ஆனால் கடந்த ஒரு ஆண்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். பொருளாதார தேக்கம், பணவீக்கம் மற்றும் எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஒரு ஆண்டில் எட்டு போர்களை தடுத்து நிறுத்தியதாகவும், இந்தியா–பாகிஸ்தான் மோதலையும் தாம் தடுத்ததாகவும் டிரம்ப் கூறினார். ஆனால் அவர் பேசிய விதம் குறித்து சமூக வலைதளங்களில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் வெள்ளை மாளிகை அவரது உரையின் அதிகாரப்பூர்வ குறிப்புகளை வெளியிட்டது.
