மும்பை: இண்டி கூட்டணியில் நிலவி வரும் தலைமைத்துவ வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
மாஹராஷ்டிராவில் வெளியான அதிகாரப்பூர்வ நாளிதழ் சாம்னாவின் தலையங்கத்தில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கூட்டணி தெளிவான தலைமை அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரளா, அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களுக்கு முன்பே, கூட்டணி ஒருங்கிணைந்த முடிவை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அல்லது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரில் ஒருவரை தேசிய அளவிலான தலைமைக்கு முன்னிறுத்துவது குறித்து கூட்டணி சிந்திக்க வேண்டும் என தலையங்கம் பரிந்துரைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்முரண்பாடுகள் மற்றும் மூத்த தலைவர்களின் மாறுபட்ட கருத்துக்கள் கூட்டணியின் செயல்திறனை பாதிக்கின்றன எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையிலான போட்டி, கேரளாவில் இடதுசாரிகளுடனான மோதல் போன்ற ‘நட்பு ரீதியிலான’ அரசியல் போட்டிகள், பா.ஜ.,விற்கு சாதகமாக அமையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாநில உரிமைகள் தொடர்பாக வலுவாக குரல் கொடுத்து வரும் ஸ்டாலின் தலைமைக்கு பொருத்தமானவர் என மணிசங்கர் அய்யர் கூறிய கருத்தும், தேசிய அரசியலில் வலிமையான பெண் தலைவராக மம்தா பானர்ஜி விளங்குகிறார் என சஞ்சய பாரு தெரிவித்துள்ள கருத்தும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இண்டி கூட்டணி, தேர்தல் காலங்களில் மட்டும் செயல்படும் அமைப்பாக இல்லாமல், தெளிவான திசையுடனும் நிலையான தலைமைத்துவத்துடனும் செயல்பட வேண்டும் என சாம்னா தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.
